செயற்கை புல்தரை ஹாக்கி மைதானம் அமையுமா? மதுரை பயிற்சி மையத்துக்கு மூடுவிழா
தேசிய அளவில் வீரர்களை உருவாக்கும் மதுரை ஹாக்கி மைதானத்துக்கு செயற்கை புல்தரை அமைக்க, இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மதுரை எல்லீஸ்நகரில் இரண்டரை ஏக்கர் இடத்தில் 60 லட்ச ரூபாய் செலவில், ஐந்தாண்டுகளுக்கு முன் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டது. அப்போதிருந்து தேசிய அளவிலான போட்டிகளும், மாநிலப் போட்டிகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மைதானத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே கூடைப்பந்து மைதானமும் உள்ளது.
இரண்டு காவலாளிகள், இரண்டு 'மார்க்கர்கள்' பணியில் இருந்தனர். தற்போது ஒரு காவலாளியும், 'மார்க்கரும்' மட்டுமே உள்ளனர். இதனால்
இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி உள்ளே நுழைந்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். காலையில் மைதானத்தில் மதுபாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. ஒரு காவலாளி மட்டும் இருப்பதால், உள்ளே நுழையும் அன்னியர்களை விரட்ட முடியவில்லை. தேசிய, மாநிலப் போட்டிகள் நடக்கும் போது பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியில்லை. மைதானத்தை ஒட்டியுள்ள, பயன்படாத ரோட்டின் பின்பகுதியை இணைத்து 'காலரி' அமைத்தால், பார்வையாளர்கள் அமர்ந்து ரசிக்கலாம். கழிப்பறைகள் இருந்தாலும், தண்ணீர் வசதி இல்லாததால் வீரர்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். மைதானத்தின் மேற்பகுதியில் தற்போது குறுமணல் கொட்டப்படாததால் வீரர்கள் விளையாடும் போது சிரமம் உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) உறுப்பினர் செயலராக இருந்த அதுல்யமிஸ்ரா, 2007ம் ஆண்டில் ஹாக்கி வீரர்களுக்கான சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டு மட்டும் இருக்கிறது. மையம் செயல்படவில்லை. இதன்கீழ் வீரர்களுக்கு காலை, மாலை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. வந்து செல்வதற்கான போக்குவரத்து கட்டணம், சிற்றுண்டி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் வழங்கப்படவில்லை. பயிற்சியை எதிர்பார்த்த வீரர்களின் கனவுகள் கானல் நீராகி விட்டது.சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் விளையாட்டு விடுதியும், அகாடமியும் உள்ளது. விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து கட்டணம், உணவு, தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஹாக்கியில் மதுரை வீரர்கள் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் இங்கு அகாடமியும் இல்லை. அமைக்கப்பட்ட சிறப்பு மையமும் செயல்படவில்லை.
எஸ்.டி.ஏ.டி., யின் கீழ் ஹாக்கிக்கு தனிப்பயிற்சியாளர் நியமிக்கப் பட்டுள்ளார். ஆனால் எல்லீஸ்நகர் மைதானத்தை கண்காணிப்பதற்கு யாருமில்லை. த
மிழகத்தில் சென்னையில் இரண்டு செயற்கை புல்தரை மைதானங்களும், திருநெல்வேலி, திருச்சியிலும் மைதானம் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தேசியளவில் வீரர்களை உருவாக்கும் மதுரையில் மட்டும் செயற்கை புல்தரை அமைக்கப்படவில்லை. மைதானத்துக்கு தனியாக கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். இரண்டு காவலாளிகளை பணியில் அமர்த்தவேண்டும். மைதானத்தைச் சுற்றி பொதுமக்கள் நடைபயிற்சி செய்கின்றனர். காலை வேளையில் 'மினி' ரேஸ்கோர்ஸ் மைதானத்தைப் போல பரபரப்புடன் செயல்படும் மைதானத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.